சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை  ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன கேள்வி எழுப்பியதுடன், தடை  ரத்து செய்ததுடன், மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்க அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக சட்டப் பேரவையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மசோதா ஒன்றை நிறைவேற்றிய அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தது. ஆனால், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதே போல் மேலும் சில சட்டத் திருத்தங்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, 10 மசோதாக்களை நிறைவேற்றி தீர்ப்பு அளித்தது.

உச்ச நீதிமன்றம் நிறைவேற்றிய இந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்பதும் ஒன்று. இந்த நிலையில், மாநில முதல்வரே துணை வேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு, துணை வேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தனர்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம் பஞ்சோலி அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக் கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணை வேந்தர்களை நியமிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

[youtube-feed feed=1]