மங்களூரு
காணாமல் போய் உள்ள கஃபே காஃபிடே அதிபர் தனது கூட்டாளிகளுக்கு எழுதி உள்ள கடிதம் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே நிறுவன அதிபருமான வி ஜி சித்தார்த்தா நேற்று இரவு முதல் காணவில்லை. நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில் அவர் காணாமல் போய் உள்ளார். அவருடைய தொழிலில் கடும் நஷ்டம் உண்டானதால் அவர் தற்கொலை செய்துக் கொண்டு இருப்பார் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. அதையொட்டி ஆற்றில் தேடும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அவர் மூன்று தினங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர், “காஃபி டே குடும்பத்துக்கும் இயக்குநர் குழுவுக்கும் எழுதிக் கொள்வது, கடந்த 37 வருடங்களாக நமது கடும் உழைப்பினால் நமது நிறுவனங்களில் 30000 நேரடி வேலை வாய்ப்பும், நமது நமது தொழில்நுட்ப பிரிவில் 20000 பணி இடங்களும் உருவாக்கி உள்ளோம். நான் கடுமையாக உழைத்தும் நமது நிறுவனத்தை லாபகரமான தொழிலாக உருவாக்கத் தவறி விட்டேன்.
நான் என்னிடம் உள்ள அனைத்தையும் அளித்து விட்டேன். ஆயினும் என்மீது நம்பிக்கை வைத்த மனிதர்களைத் தவிக்க விட்டமைக்கு வருத்தம் அடைகிறேன். வெகு நாட்களாக நான் தொழிலில் கடுமையாகப் போராடி வருகிறேன். நான் எனது நண்பரிடம் இருந்து வாங்கிய பெரும் தொகையில் சிறிதளவு மட்டுமே திருப்பி தந்துள்ளேன். இதனால் எனது நிறுவன பங்குகளை விற்க வற்புறுத்தப் பட்டு வருகிறேன் . கடன்காரர்களின் தொல்லையைப் போக்க வேறு வழியும் தெரியவில்லை.
இதில் நமது நிறுவனப் பங்குகள் ஒவ்வொன்றாக நான் கைமாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். அத்துடன் நான் அளித்த கணக்குகளைத் தேவையின்றி நிராகரித்தனர். இது மிகவும் அநியாயமாகும். இதனால் நமது நிறுவனம் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது
நான் உங்கள் அனைவரையும் இந்த தருணத்தில் திடமாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நமது நிறுவன எனது தவறான மேலாண்மையால் பாழானது. புது மேலாண்மை மூலம் நிறுவனம் மீண்டும் வலுவடைய வேண்டும். இவை அனைத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன். எனது மேற்பார்வையில் நடந்த பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் நான் மட்டுமே பொறுப்பு ஆகும். எனது குடும்பத்தினர் உள்ளிட்ட யாருக்கும் நிதி நிலை பிரச்சினைகள் குறித்த தகவலை அளிக்காமல் இருந்தது எனது தவறாகும்.
நான் யாரையும் ஏமாற்றவோ தவறாக வழி நடத்தவோ எண்ணவில்லை. நான் ஒரு தொழிலதிபராகத் தோல்வி அடைந்துள்ளேன். என்னுடைய இந்த கடிதத்தை ஒரு நாள் நீங்கள் புரிந்து கொண்டு என்னை மன்னிப்பீர்கள் என நம்புகிறேன். நான் நமது நிறுவன சொத்துக்கள் மற்றும் அதன் மதிப்புக்கள் விவரத்தை இணைத்துள்ளேன். இந்த சொத்துக்கள் நாம் அளிக்க வேண்டிய தொகையை விட அதிகம் இருக்கும் என்பதால் அனைத்து கடன்களையும் தீர்த்து விட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.