இசைஞானி இளையராஜா இன்று தனது இளைய சகோதரரான கங்கை அமரனை சந்தித்தார்.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக மட்டுமன்றி பாடலாசிரியர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என்று பன்முகத் தன்மையுடன் சுழன்று வந்தவர் கங்கை அமரன்.

80 களில் தனது அண்ணன் இளையராஜா இசையுலகில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் அவரது எக்கோவாக அவருக்குப் பின்னால் பக்கபலமாக இருந்தவர் கங்கை அமரன்.

90 களின் இறுதியில் இவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இணைந்து செயலாற்றுவதை சகோதரர்கள் இருவரும் நிறுத்திக் கொண்டனர்.

சமீபத்தில், 2017 ம் ஆண்டு ராயல்டி தொடர்பாக எஸ்.பி.பி.க்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதை வன்மையாக கண்டித்திருந்தார் கங்கை அமரன்.

இந்த நிலையில், பாவலர் சகோதரர்கள் என்று தமிழ் திரையுலகில் அறியப்படும் இளையராஜா மற்றும் கங்கை அமரன் இன்று மீண்டும் இணைந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குனரும் கங்கை அமரனின் மகனுமான வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.