‘வந்தே மாதரம்’ குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திர போசுக்கு ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம் ஒன்றை குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்தக் கடிதத்தில் “இந்தப் பாடல் முஸ்லீம்களை கொதிப்படையச் செய்யும்” என்று நேரு கூறியுள்ளதாக எடுத்துரைத்தார்.
அதேவேளையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, அதே கடிதத்தில் உள்ள மற்ற வரிகளைச் சுட்டிக்காட்டி மோடியின் கூற்றை எதிர்த்து பேசினார்.

மோடி கூறியது: காங்கிரஸ் மற்றும் நேரு, முஸ்லிம் லீக்கின் அழுத்தத்தால் வந்தே மாதரம் இரண்டு பத்திகள் மட்டும் பாட வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.
ஜின்னா 1937 அக்டோபர் 15 அன்று வந்தே மாதரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு நேரு எழுதிய கடிதத்தில், “ஆனந்தமத் பத்திரிகையில் வெளியான பாடலின் பின்னணி முஸ்லிம்களைத் தூண்டக்கூடும்,” என்று சொன்னார் என்று மோடி மேற்கோள் காட்டினார்.

நேருவின் கடிதத்தில் “ஆனந்தமத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பார்த்தேன். அதன் பின்னணி சில முஸ்லிம்களை எரிச்சலடையச் செய்யலாம்” என்று குறிப்பிட்டுள்ளதாத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, ஒரே ஒரு வரியை மட்டும் படித்துவிட்டு நேருவின் கடிதத்தில் உள்ள முக்கியமான வரிகளை மோடி மறந்துவிட்டார் என்று கூறினார்.
“வந்தே மாதரத்திற்கு எதிரான இன்றைய எதிர்ப்பு பெரும்பாலும் மத அடிப்படைவாதிகள் உருவாக்கிய விஷமப்பிரச்சாரம்.
உண்மையான குறைகள் எங்கிருக்கிறதோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும்; ஆனால் மத வெறியை தூண்டும் குழுக்களை நம்மால் மகிழ்விக்க முடியாது.”

அதாவது, நேரு முஸ்லிம்களை ‘பார்த்து பயந்து’ பேசவில்லை; மாறாக மத அடிப்படைவாதிகளின் அரசியலை கடிதத்தில் கண்டித்தார் என்று பிரியங்கா பேசினார்.
மேலும், நேருவின் கடிதத்தில், வங்கத்தில் எதிர்காலத்தில் முஸ்லிம்களும் அரசியலில் அதிகளவு பங்கெடுக்கப்பார்கள், அவர்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வராவிட்டால், மதவெறி அரசியல் வலுப்பெறும்.
முஸ்லிம் லீக்கின் சமீபத்திய மாநாட்டில் “தரம் தாழ்ந்த மத அரசியல்” நடந்தது என்று நேரு கண்டித்தார். அதைக் கட்டுப்படுத்த முஸ்லிம் மக்களிடம் நேரடியாக சென்று பேச வேண்டும் என்று கூறியுள்ளதாக பிரியங்கா குறிப்பிட்டார்.
1937ல் வந்தே மாதரம் குறித்து விஸ்வ பாரதி நியூஸ் பத்திரிகையில் வெளியான விமர்சனம் குறித்து நேரு மற்றும் தாகூர் இருவருக்கும் சுபாஷ் சந்திர போஸ் எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக நேரு இந்த கடிதத்தை எழுதியிருந்தார்.

இந்தப் பாடல் மீது தேவையில்லாத சர்ச்சை எழுப்பப்படுவதாக போஸ் குறிப்பிட்டிருந்தார், இதுகுறித்து தனக்கு நேரு எழுதிய கடிதத்திற்கு பதிலளித்த ரவீந்திரநாத் தாகூர், “முழு கவிதை முஸ்லிம்களை நோகடிக்கலாம். ஆனால் நாட்டு பாடலாகப் பாடப்படுவது முதல் இரண்டு பத்திகள் தான்; அவை அது போன்ற உணர்ச்சிகளை உண்டாக்காது.” என்று கூறியிருந்தார்.
வந்தே மாதரம் பாடல் குறித்து போஸ், நேரு மற்றும் தாகூர் இடையிலான இந்த கடிதங்கள் நேரு முஸ்லிம்களின் கொந்தளிப்பைக் கண்டு பயந்தே பாடலின் வரிகளைக் குறைத்ததாக வெளியிடப்பட்ட தகவல் அர்த்தமற்ற அரைகுறை தகவல் என்பதை விளக்குவதாக உள்ளது.
மத அடிப்படைவாதிகள் இதை பெரிதாக்கி உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனையாக உருவாகக்கூடும் என்பதால் இதில் கவனமாக நடக்க வேண்டும் என்பதே நேரு எழுதிய கடிதத்தின் சாராம்சம் என்று பிரியங்கா காந்தி விளக்கமளித்தார்.
.