புதுடெல்லி: ‘பிட் காய்ன்’ என்று அழைக்கப்படும் மெய்நிகர் நாணயத்தின் மதிப்பு தற்போது உச்சத்தில் ஏறிவருகிறது. அது, தற்போதைய நிலையில் இந்திய மதிப்பில் ரூ.11 லட்சத்தை எட்டிவிட்டது!

இதன்மூலம், மெய்நிகர் நாணயங்கள் வரிசையிலேயே, அதிக மதிப்புவாய்ந்த நாணயமாக மாறியுள்ளது பிட்காய்ன். அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற தன்மை, கொரோனா தாக்கம் ஆகியவற்றின் காரணமாக, இந்த நாணயத்தில் செய்யப்படும் முதலீடு அதிகரித்து வருகிறது.

அதாவது கிட்டத்தட்ட கடந்த 2017ம் ஆண்டின் நிலைக்கு, பிட் காய்ன் திரும்பியிருக்கிறது. அந்த சமயத்தில் இந்த நாணயம் உச்சநிலையான ரூ.12.5 லட்சம் ரூபாயை தொட்டது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு, ரிசர்வ் வங்கி, இந்தியாவில் மெய்நிகர் நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்வதை தடை செய்தது.

இதனையடுத்து, நாட்டில் இத்தகைய நாணயங்களின் வளர்ச்சியில் தேக்கம் ஏற்பட்டது. பின்னர், அண்மையில் உச்ச நீதிமன்றம் தடையை நீக்கியதையடுத்து, உலகின் பல மெய்நிகர் நாணயங்கள், இந்திய சந்தையில் இடம்பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தற்போது, பிட் காய்ன் உச்சத்தில் இருக்கும் நிலையில், எத்தீரியம் நாணயம், தற்போது ரூ.32,875 க்கு விற்பனையாகின்றது. அதேபோல், லைட் காய்ன் ரூ.4,666 ரூபாய்க்கு விற்பனையாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.