சென்னை: மகாகவி பாரதியார் அவர்களின் 140 வது  பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிர மணியன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சு., கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வர தடுப்பூசிதான் தீர்வு என கூறினார்.

முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியார் 140வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  அவரின் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் சாமிநாதன், மற்றும் மா.சுப்பிரமணியன்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் இன்று நடைபெற்று 14வது மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். சென்னையில் 200 வார்டுகளில்  1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை தியாகராயர் நகரில்  செயலபட்டு சிறப்பு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அப்போது, சென்னையில் 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள், தயக்கம் காட்டாமல் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு. அதனால், இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பல்வேறு வகை வைரஸாக பரவி வருகிறது. அந்த வகையில் முன்னதாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் காரணமாக தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது 18 பேர் இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.