சென்னை: குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4வது முறையாக உயர்த்தப்பட்டு, மொத்த காலியிடங்களுக்கான எண்ணிக்கையை  9,532 ஆக உயர்த்தி  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

குரூப் 4 தேர்வுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களுடன்  கூடுதலாக 41 காலி பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி குறிப்பிட்டுள்ளது.

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்பட 23 வகையான பணிகளில் மொத்தம் 6,244 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

இதற்கிடையே தான் குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கையை ஏற்று சமீபத்தில் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது. அதாவது கூடுதலாக 480 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து, 2வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை மேலும், 2,208 காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டு, மொத்த காலியிடங்கள் 8,932 என்ற அளவில் உயர்ந்தது.  அதன்பிறகு 3வது முறையாக டிஎன்பிஎஸ்சி குரூப்4 காலிப்பணியிடங்களின் மேலும் உயர்த்தப்பட்டு, 9,491 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது 4வது முறையாக மேலும் 41 காலி பணியிடங்கள் குரூப்-4-ல் சேர்த்து,  மொத்த  காலி பணியிடங்கள் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தி உள்ளது.