டேராடூன்

த்தரகாண்ட் மக்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்தால் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்வதற்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் இடம் காவல்துறை விசாரணை நடப்பது வழக்கமான ஒன்றாகும்.   இந்த விசாரணையின் மூலம் விண்ணப்பதாரர்கள் மீது ஏதும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அவ்வாறு வழக்குகள் நிலுவையில் உள்ளோர் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் முடக்கி வைக்கப்படும்.  இது அனைத்து மாநிலங்களில் உள்ள காவல்துறையின் செயல்பாடுகளில் ஒன்றாகும்.

நேற்று உத்தரகாண்ட் காவல்துறைத் தலைவர் அசோக் குமார், “பலரும் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதனைத் தடுப்பது மிகவும் அவசியமாகும்.  குறிப்பாக வெளிநாடு செல்வோர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆய்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.  எனவே இனி பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக கணக்குகள் ஆராய வேண்டும்.

ஏற்கனவே தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு பாஸ்போர்ட் அளிக்கக் கூடாது என விதிமுறைகள் உள்ளன.  அதற்கு ஆதரவாக நான் கருத்து தெரிவிக்கிறேன்.  இதில் புதிய நடவடிக்கைகள் ஏதும் இல்லை.  ஒரு காவல்துறை அதிகாரி என்னும் நிலையில் அரசியல் அமைப்பால் வரையறை செய்யப்பட்டுள்ள தேசவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நான் செயல்படுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.