உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை தொடர அந்நாட்டின் அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த சரிவை சீர்செய்யவும் அதனை மீண்டும் கட்டியெழுப்பவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் தினமும் பல்வேறு மாற்றங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதன் மூலம் உலக அரங்கில் தனது செல்வாக்கை உயர்த்தவும் அதேவேளையில் இழந்த பொருளாதாரத்தை மீட்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவின் ராணுவ பலத்தின் முன் நிதானமாக செயல்படாமல், உக்ரைன் தன்னிச்சையாக போரை முன்னெடுத்ததாக குற்றம் சாட்டிய டிரம்ப், “நன்கு அறியப்பட்ட ஒரு நகைச்சுவை நடிகரான ஜெலன்ஸ்கி ஜனநாயக முறைப்படி அதிபராக தேர்வான நிலையில் தேர்தல் நடத்த மறுப்பது சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.”

அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த பேச்சால் அதிர்ந்து போன ஜெலன்ஸ்கி-க்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவுக்கு எதிராக நடந்து வரும் போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான பாதுகாப்பு உதவிக்கு ஈடாக உக்ரைனில் உள்ள அரிய கனிம வளங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உக்ரைனில் கிடைக்கும் டைட்டானியம் மற்றும் காலியம் போன்ற உலோகங்கள் உள்ளிட்ட அரிய கனிமங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது.

தற்போது இந்த அரிய உலோகங்களை வைத்துள்ள சீனா உலகளாவிய வர்த்தகத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த நிலையில் வாஷிங்டனின் இந்த கோரிக்கை சீனாவின் பிடியை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ரஷ்யாவுடனான போரில் அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிக்கு ஈடாக 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கனிமங்களை தர வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஜெலென்ஸ்கி நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது போரை அறிவித்தது. உக்ரைனுக்கு 67 பில்லியன் டாலர் ஆயுதங்களையும் 31.5 பில்லியன் டாலர் நேரடி பட்ஜெட் உதவியையும் அமெரிக்கா வழங்கியுள்ளது.

இருப்பினும், அதற்கு ஈடாக கனிமத்தை வழங்க ஜெலென்ஸ்கி மறுத்ததுள்ளதை அடுத்து டிரம்ப் ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.