வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார்.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
270 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலே வெற்றி என்கிற நிலையில், ஜோ பைடன் 306 வாக்குகளை பெற்றார். டிரம்புக்கு 232 ஓட்டுகளே கிடைத்தது. ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கும் தொடர்ந்து உள்ளது.
இந்த நிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை மாவட்ட நீதிபதி தள்ளுபடி செய்தார். தேர்தலில் முறைகேடு என்ற வாதத்திற்கு வலு சேர்க்க டிரம்ப் தரப்பினர் தவறிவிட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளை மாற்ற கடுமையான சட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டிரம்ப் தரப்பினருக்கு பெரும் பின்னடைவாக இது அமைந்துள்ளது.