டெல்லி: கொரோனா பரவல் காரணமாக கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான 2020-21 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு, திட்டமிட்டதற்கு 4 மாதங்கள் கால தாமதமாக 2020 அக்டோபா் மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால், கொரோனா காரணமாக முதல்நிலைத் தோ்வை ஒத்தி வைக்க கோரி ரச்னா சிங் என்ற தோ்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கு விசாரணையில் இருக்கும்போதே யுபிஎஸ்சி தேர்வுகளை நடத்தி முடித்தது. இதையடுத்து, வயது வரம்பு அடிப்படையில் 2020ம் ஆண்டுடன் யுபிஎஸ்சி தோ்வை எழுதும் வாய்ப்பை இழந்தவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும், யுபிஎஸ்சிக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பரிந்துரையை யுபிஎஸ்சியும் ஏற்றுக் கொண்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு வாய்ப்பை இழந்தவர்கள் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. 2021-22ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 10ம் தேதி வெளியாகிறது.