டில்லி:

ன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண், தற்போது விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கடந்த 10ந்தேதி,  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கேட்டு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதம் குறித்த தகவல்கள் தற்போது, வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதத்தை ஏன் என் கவனத்துக்குக் கொண்டு வரவில்லை? என்று உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் தலைமை நீதிபதி கடுங்கோபத்துடன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இந்த வழக்கை நாளை (வியாழக்கிழமை) விரிவாக விசாரிக்கப்படும் என்றும், தெரிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உன்னாவ் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாஜகவை சட்டமன்ற உறுப்பினர் செங்கார் உள்பட பலர் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, பாஜக எம்எல்ஏ செங்கார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, முதல்வர் ஆதித்யநாத் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் நாடு முழுவதும் தெரிய வந்தது. தற்போது,  இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டச் சிறுமி, ரேபரேலி சிறையில் இருக்கும் உறவினரைச் சந்திக்க வழக்கறிஞர் மற்றும் சிலருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த கார்மீது லாரி ஒன்று பலமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இதில் கோர விபத்தில்  பாதிக்கப்பட்ட பெண்ணும், வழக்கறிஞரும்  படுகாயமடைந்த நிலையில் உடன் வந்த 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இது விபத்து என்று காவல்துறையினர் கூறி வருகின்றனர். ஆனால், இது திட்டமிட்ட வசதி என்று எதிர்க்கட்சிகளும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது  லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும்,  பாதிக்கப்பட்ட பெண் , “தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, தான் கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினேன்” என்று தெரிவித்தார்.

இது  ஊடகங்களில் வெளியான நிலையில், இதை அறிந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் இன்று  போக்சோ வழக்கு தொடர்பான விசாரணையின்போது, வழக்கறிஞர் கிரி என்பவர்,  போக்சோ வழக்குகளையும், உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் குறித்து தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ” உன்னாவ் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எனக்கு கடிதம் எழுதிய விவகாரம் எனக்கு தெரியாது. இன்று காலை நாளே டுகளை வாசித்தபோதுதான் அது குறித்து அறிந்தேன். உடனடியாக உச்ச நீதிமன்றப் பதிவாளரை அழைத்து கேட்டபோது கடந்த 12-ம் தேதி அந்தக் கடிதம் எனக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.

12-ம் தேதி அனுப்பிய கடிதத்தை ஏன் என் பார்வைக்கு கொண்டுவரவில்லை என்று பதிவாளரிடம் நான் விளக்கம் கேட்டுள்ளேன். அந்த கடிதத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. மேலும், உன்னாவ் பலாத்கார வழக்கில் தற்போதுள்ள நிலை என்ன, அந்த பெண்ணுக்கு நேர்ந்த விபத்து குறித்த தகவல் அனைத்தும் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

துரதிர்ஷ்டவசமாக அந்த கடிதம் இன்னும் என்னிடம் வந்துச் சேரவில்லை. ஒருவேளை அந்தக் கடிதம் என்னிடம் உரிய காலத்தில் கிடைத்திருந்தால், சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முயற்சித்து, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காமல் தடுத்திருக்கலாம்.

இந்த வழக்கு நாளை விரிவாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.