டெல்லி:

நாட்டிலேயே முதன் முதலாக மத்திய சட்டத்துறை பிரத்யேக ‘‘சட்டம் தொலைக்காட்சி’’ என்ற சேனல் ஒளிபரப்பை தொடங்கவுள்ளது.

இதில் முத்தலாக் முறை, பொது சிவில் சட்டம் போன்ற விவாதங்கள், முக்கிய தீர்ப்புகள் குறித்த விவாதகங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டு துறை சார்பில் ‘‘ஸ்வயம் பிரபா’’ என்ற டிடிஹெச் ஒளிபரப்பு திட்டத்தை பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களுக்காக 32 சேனல்களுடன் தொடங்கியுள்ளது. இதில் சட்ட சேனலையும் சேர்க்க மத்திய சட்டத்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு துறைக்கு உரிமம் கேட்டு சட்டத் துறை கடிதம் எழுதியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குனர் பிரகாஷ் ஜா மூலம் சட்ட பயிற்சி குறித்த தரமான நிகழ்ச்சிகளை தயாரிக்க சட்டத்துறை ஆலோசித்து வருகிறது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்துக்கு 5 நிமிட குறும் படங்கள் 15 தயாரிக்க பிரகாஷ் ஜாவை நியமித்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஏழைகளுக்கு இந்த ஆணையம் இலவச சட்ட உதவிகளை அளித்து வருகிறது. மேலும், சட்ட மாணவர்களுக்கும், சுய திரைப்பட இயக்குனர்களுக்கு 5 முதல் 30 நிமிடம் வரையிலான குறும் படங்கள் தயாரிக்கும் போட்டியை சட்ட அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை பரிசு அறிவிக்கப்ப்டடுள்ளது.

தினமும் சில மணி நேரம் ஒளிபரப்ப கூடிய வகையில் இது தொடங்கப்படுகிறது. பின்னர் போதுமான அளவுக்கு நிகழ்ச்சிகள் கைவசம் வந்தவுடன் 24 மணி நேர சேனலாக செயல்படவுள்ளது.