உனக்காக ஒரு மனசு
பா. தேவிமயில் குமார்
உனக்காவேக் காத்திருந்தது
ஒரு காலம் !
உன் பின்னால் உலகமே
ஓடியது ஒரு காலம் !
வெகு தூரத்திலிருந்து, நீ
வந்தவுடன் வரவேற்போம் !
ஒய்யாரமாய் நடையிட்டு
உறவுகளுக்கு பாலமிட்டாய் !
உன் கால்களைப் பிடித்துக் கொண்டு
உலகையே சுற்றி வந்தோம் !
வரவுகளையும் வாங்கி வருவதால், உன்
வரவு விரும்பப்பட்டது !
காதலுக்கு நீயே கடவுள், எனவே
கண்காணிக்கப்பட்டாய் !
வேலை தேடியவர்களுக்கு நீயே
தலைமகனாய் தெரிந்தாய் !
பிரிந்த குடும்பங்களை
பரிவாய் சேர்த்து வைத்துள்ளாய் !
குடும்பக் கூடுகள் உன்னால்
குழம்பிய வரலாறுகளும் உண்டே !
உன் தலைகளை வாங்கி
கலைப் பொருளாய் சேர்த்தோம் !
பறவைகள், விலங்குகள், மனிதர்கள் எனப்
பல சவாரிகள் பார்த்து விட்டாய் !
மிதிவண்டி, மோட்டார் சைக்கிள், பேருந்து,
மிதக்கும்கப்பல், ஆகாயம் எனவும் பார்த்து விட்டாயே !
நவீன யுகத்தில் நீயும்
நாகரீகமாய் மாறி விட்டாயோ ? அன்பே !
ஏகாதிபத்தியமோ, அடிமை அரசோ
கொடுங்கோலனோ உன்னைக்கூடவே வைத்துக் கொண்டார்கள் !
பணக்காரனுக்கும் நீ வேண்டும்
பரம ஏழைக்கும் நீ வேண்டியவனாய் இருந்தாய்
உன் பழைய பதிவுகளை பார்த்தேன்
என் கண்ணில், நீர் கொட்டியது !
நவீனயுகத்தின் ஆரம்பப்புள்ளி
நீ என்பதுதான் இன்றைய ஆச்சர்யம் !
நீ ஒரு சிறந்த கூத்துக்காரன்,
நீண்ட காலத்தில் பல வேடம் பூண்டாய் !
மகிழ்ச்சி, கோபம், அழுகை, குழப்பம், காதல்
மதியூகம், தட்பவெப்பம், பகை, அரசியல், என எத்தனை வேடம் ? உனக்கு !
நீ குடியிருந்த வீட்டைக்
கடந்து செல்கிறேன் தினமும்
ஆனால், உன்னைத்தான்
காணமுடிவதில்லை தினமும் !
இக்கால இளையவர்க்கு
எக்காலத்திலும் உனைப்புரிந்திட முடியாது !
வாளித் தண்ணீரில் குளிப்பவர்க்கு
வன அருவியின் சுகம் தெரியாது தான் ! என்ன செய்ய ?
அது போல
முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் என
மூழ்கியவர்க்கு உன் அருமை தெரியாது !
உனக்காக உலகம் முழுதும்
உருகிடும் மனசு ஏராளம் !
கடிதமே ! வா ! வந்து விடு ! உனக்காக
காத்திருக்கிறோம், உன் ரசிகர்கள் !
“எனதருமை கடிதமே”! மீண்டும்
ஒரு பிறவி எடுத்து வா ! முன்போல
– பா. தேவிமயில் குமார்