டில்லி:
மத்தியஅரசின் கட்டாய இந்தி படிப்பு தொடர்பான வரைவாணைக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், சமூக வலைதளமான டிவிட்டரில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. உலக அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மத்தியஅரசு பதவி ஏற்று இன்னும் 2 நாட்கள் கூட ஆகாத நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு அச்சாரம் போட்டுள்ளது. இது தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழுவினரின் தேசிய கல்விக்கொள்கை சம்பந்தமான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தோமர் வெளியிட்டு உள்ளார். அதில் மாநில மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி என மும்மொழி கொள்கையை வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது பலத்த விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.
தமிழகத்தில் இருமொழி கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன.
இந்த நிலையில், இந்தி திணிப்பை எதிர்த்த ஹேஷ்டேக் உலக அளவில் டிரண்ட்டாகியுள்ளது. இது உலக டிரண்டிங்கில் 3-வது இடத்தைப் பிடித்தது. இதே போல, இந்திய அளவிலான டிரெண்டிங்கில் இந்தி எதிர்ப்பு முதலிடத்தைப் பிடித்தது.