மு.க. ஸ்டாலின், ரஜினி, தோனி, டெண்டுல்கர், அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ ப்ளூ டிக்-கை ட்விட்டர் சமூக வலைதளம் நீக்கியுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் பழைய முதலாளிகள் பழைய கொள்கைப்படி வழங்கிய ப்ளூ டிக்குகளை நீக்கப்போவதாகவும், ப்ளூ டிக்குகளை மாதம் $8 சந்தா தொகை செலுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இதனையடுத்து ஏப்ரல் 1 முதல் பல்வேறு பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ப்ளூ டிக் தொடர கால அவகாசம் வழங்கியது.

இந்த கால அவகாசத்தையும் மீறி பழைய கொள்கையில் தொடர விரும்பியவர்களின் ப்ளூ டிக் நேற்று முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபலங்களுக்கு அவர்கள் விருப்பத்தை ஏற்று ப்ளூ டிக் வழங்கி வந்தது.

தற்போது இந்த ப்ளூ டிக் மாதம் $8 சந்தா தொகை செலுத்தும் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கப்பட்டு வரும் நிலையில் பழைய ப்ளூ டிக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

பிரபலங்களைக் கொண்டு கொழுத்த ட்விட்டர் நிறுவனம் அதை பணமாக மாற்றிய நிலையில் தற்போது அந்நிறுவனத்தை வாங்கியுள்ள எலன் மஸ்க் உலகின் முன்னணி பிரபலமாக வலம்வருகிறார்.