ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி “மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை என்பதை இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவ மேலாதிக்க அரசியலை விமர்சித்தும் இந்தியாவின் மதசார்பற்ற பன்முகத்தன்மை குறித்தும் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி நேற்று பேசியிருந்தார்.

18வது மக்களவையில் முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் மதவாத அரசியலை நேரடியாகத் தாக்கினார்.

புத்தரை மேற்கோள் காட்டி வன்முறை நம் நாட்டின் பாரம்பரியம் அல்ல என்று கூறிய ராகுல் காந்தி சிவன், குருநானக், இயேசு கிறிஸ்து ஆகியோரின் படங்கள் மற்றும் குர்ஆன் வசனம் அடங்கிய பதாகைகளை தனது பேச்சின் நடுவே உயர்த்திப்பிடித்தார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது தீவிரவாதிகளை அவர்களின் உடையை வைத்து தெரிந்துகொள்ளலாம் என்று பேசிய மோடி குறித்து விமர்சித்த ராகுல் காந்தி, “உயிரியல் மனிதனாக இல்லாமல் பிறப்பு இறப்பு இல்லாத பரமாத்தாமா என்று தன்னை கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும் அவர் திரைப்படம் மூலம் மீண்டும் உயிர்பெற்றதாகவும் கூறுகிறார்” என்று பிரதமர் மோடியை நேரிடையாக விமர்சித்தார்.

அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி, ராகுல் காந்தி இந்துக்களை இழிவுபடுத்துவதாகக் கூறினார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “மோடியும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மட்டுமே இந்துக்கள் இல்லை” என்று பேசினார்.

இதைக்கேட்டு கொந்தளித்த பாஜக எம்.பி.க்கள் ராகுல் காந்தியை தொடர்ந்து பேசவிடாமல் கூச்சலிட்டனர். மோடியைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பலர் ராகுல் காந்திக்கு எதிராக பேசத் துவங்கினர்.

இதனால் ராகுல் காந்தியின் பேச்சு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது, ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிவீர் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களை ராகுல் காந்தி விமர்சித்தார்.

இந்த நிலையில் அவரது பேச்சின் முக்கிய பகுதிகள் பலவற்றை அவைகுறிப்பில் இருந்து நீக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று உத்தரவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பேசிய முதல் பேச்சின் பெரும்பகுதி நாடாளுமன்ற அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “மோடியின் உலகில் உண்மைக்கு எப்போதும் இடமில்லை என்பதை இது காட்டுகிறது. ஆனால் உண்மை என்றும் நிலைக்கும், உண்மை வென்றே தீரும்” என்று கூறியுள்ளார்.