வாஷிங்டன்
தற்போது நடந்து வரும் ஜி 20 மாநாட்டில் நடந்த கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கோல்ஃப் விளையாடச் சென்றுள்ளார்.
சவுதி அரேபியா தற்போது நடத்தி வரும் ஜி 20 நாடுகள் மாநாடு கொரோனா அச்சுறுத்தலால் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. இரு நாட்களாக நடந்து வரும் இம்மாநாட்டில் முதல் நாளில் 20 நாடுகளின் தலைவரும் பங்கேற்றுள்ளனர். அதில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒருவர் ஆவார்.
ஆனால் டிரம்ப் 13 நிமிடங்களுக்குப் பிறகு தொடர்பில் இல்லை. தேர்தல் முடிவு மற்றும் கொரோனா பரவல் குறித்த தனது கருத்துக்களை அப்போது டிவிட்டரில் பதிந்து விட்டுச் சென்ற டிரம் மீண்டும் வரவில்லை. அதன்பிறகு ஜி 20 நாடுகளின் மாநாட்டுத் தலைவர்கள் இணைந்து கொரோனா கட்டுப்படுத்தல் குறித்துச் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஜெர்மன் பிரதமர், பிரான்ஸ் அதிபர், தென் கொரிய அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். ஆனால் டிரம்ப் அதில் கலந்துக் கொள்ளவில்லை. வாஷிங்டன் நகருக்குப் புறநகரில் உள்ள கோல்ஃப் கிளப் மைதானத்துக்குச் சென்று அவர் கோல்ஃப் விளையாடி உள்ளார். இது உலக மக்களை கடும் பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து வெளியான ஊடக செய்தியில், “அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து உலக நாடுகளின் தலைவர்கள் ஜோ பைடனுக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப் ஜி 20 நாடுகள் மாநாட்டில் பங்கு பெறுவதைத் தவிர்த்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.