வாஷிங்டன்

தவிக் காலத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் என்னும் பெயரை டிரம்ப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.   அதிபராக வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 பிரதிநிதிகள் வாக்குகளும் ஜோ பைடனுக்குக் கிடைத்ததால் வெற்றி உறுதியானது. மொத்தம் 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஊடகங்கள் அறிவித்தன.

தற்போதைய அதிபர் டிரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

அதிபர் பதவியில் இருக்கும்போதே தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த 11 ஆம் அமெரிக்க அதிபர் என்ற பெயரைக் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் பெற்றார்.

ஏற்கனவே இவ்வாறு தோல்வி அடைந்தோர் விவரம் வருமாறு :

  1. முதன்முதலில் 1791-1801 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜெபர்சனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
  2. 1825- 1829 ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்த ஜான் குயின்ஸி ஆடம்ஸ், ஆன்ட்ரூ ஜாக்ஸனிடம் தோல்வி அடைந்து பதவியை இழந்தார்.
  3. 1837 – 1841 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த மார்ட்டின் வான் புரென், வில்லியம் ஹென்றி ஹாரிஸனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
  4. 1885 – 1889 ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்த குரோவர் க்ளிவ்லாந்த், பெஞ்சமின் ஹாரிஸனிடம் தோல்வியைத் தழுவினார்.
  5. 1889-1893 ஆம் ஆண்டுவரை ஒருமுறை மட்டுமே அதிபராக இருந்த பெஞ்சமின் ஹாரிஸன், குரோவர் கிளிவ்லாந்திடம் தோல்வி அடைந்தார். இரண்டாவது முறையாக க்ளிவ்லாந்த் அதிபரானார்.
  6. 1909 -1913 ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்த வில்லியம் ஹெச் டாப்ட், உட்ரோ வில்ஸனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
  7. 1929- 1933 ஆம் ஆண்டுவரை அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர், பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட்டிடம் தோல்வி அடைந்தார்.
  8. 1974- 1977 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜெரால்டு ஃபோர்ட், ஜிம்மி கார்ட்டரிடம் தோல்வி அடைந்தார்.
  9. 1977- 1981 ஆம் ஆண்டு வரை ஒருமுறை மட்டுமே அதிபராக இருந்த ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகனிடம் தோல்வி அடைந்தார்.
  10. 1989- 1993 ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யு. புஷ், பில் கிளிண்டனிடம் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
  11. 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அதிபராக இருந்துவரும் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்தார்.