லண்டன்: உலகப் பருவநிலை மாற்றம் தொடர்பாக, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை குற்றம்சாட்டும் தனது வேலையை மீண்டும் தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
மேலும், உலகின் ஒரு சுத்தமான பருவநிலையை அமெரிக்கா கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால், 2017ம் ஆண்டு ஏற்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை தான் விரும்பவில்லை என்று கூறி, அதிலிருந்து அமெரிக்காவை விலக்கும் நடவடிக்கையை மேற்கொண்டவர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து பட்டத்து இளவரசர் சார்லசுடன் அவர் இதுதொடர்பாக நடத்தியப் பேச்சுவார்த்தையை அடுத்து இவ்வாறு கூறினார். மேற்கண்ட மூன்று நாடுகள் உள்பட பல நாடுகளை, பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
இங்கிலாந்து நாட்டிற்கு 3 நாள் அரசுமுறை பயணமாக சென்றுள்ளார் அமெரிக்க அதிபர். அங்கு, அந்நாட்டு அரசி இரண்டாம் எலிசபெத், ஃபிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் டரூடோ மற்றும் பிறருடன் இணைந்து, இரண்டாம் உலகப்போரில் நேச நாட்டு கூட்டணி கடந்த 1944ம் ஆண்டு மேற்கொண்ட நார்மண்டி தாக்குதலின் 75வது ஆண்டு நிறைவு தினத்தை நினைவுகூறும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அயர்லாந்து புறப்பட்டு சென்றார்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மிகவும் ஆர்வமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்தார் டிரம்ப்.