திருச்சி

திருச்சி நீதிமன்றம் நாம் தமிழர் நிர்வாகி சாட்டை துரைமுருகனை விடுவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது பிரச்சார மேடையில் தி.மு.க. அரசு மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.

எனவே தென்காசி மாவட்டம் குற்றாலம் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் காவல்துறையினர் விசாரணை நடத்திய பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார்.