சென்னை: அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக போக்குவரத்து தொழிலாளர் களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக தமிழக அரசுக்கும், போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே 7வது கட்ட பேச்சுவார்த்தை நேற்றுமுதல் நடைபெற்று வந்தது. இன்று 2வது நாள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012-ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ9,329 வரையிலும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் மூலம் ஓட்டுநர்களுக்கு ரூ.2,012ல் இருந்து ரூ.7,981 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்றும், நடத்துனர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ.6,640 வரையிலும், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரையிலும் ஊதிய உயர்வு கிடைக்கும் என்றார்.
மேலும்,பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.