சென்னை: பராமரிப்பு பணி காரணமாக, நாளை (ஞாயிறு) கடற்கரை – செங்கல்பட்டு புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 12) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு ரயில் நிலைத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) காலை 11.10 முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மே 12-இல் கடற்கரையிலிருந்து காலை 9.25, 10 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் புகா் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும்.
மறுமாா்க்கமாக அதே நாளில் காலை 11.20, பிற்பகல் 12 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு புறப்படும் ரயில்கள் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
மேலும், பயணிகளின் வசதிக்காக, விசாகப்பட்டினம் – சென்னை சென்ட்ரல் இடையே இயங்கும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் (எண்: 22869/22870) மே 13 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை ஒரு கூடுதல் படுக்கை வசதிகொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.