டெல்லி
நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது. பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி வழக்குப்பதிவு செய்தது.
மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிசோடியாவை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ கோர்டில் மணீஷ் சிசோடியா தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன
கடந்த மாதம் 30 ஆம் தேதி இந்த மனுக்கள் நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்குவதற்கான சூழல் தற்போது சரியாக இல்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
எனவே மணீஷ் சிசோடியா தரப்பில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிசோடியா தரப்பு வழக்கறிஞர் மணீஷ் சிசோடியா சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்றும் மக்களவை தேர்தல் நடப்பதால் அவரது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டார். நீதிபதிகள் அமர்வு இதை ஏற்று, சிசோடியாவின் ஜாமின் மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]