டோக்கியோ: ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள டோக்கியோ வருகை தரும் உலக நாடுகளின் வீரர்களை வரவேற்க ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒலிம்பிக் கிராமம் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு (2021) நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும்.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் டோக்கியோ பயணம் செய்ய தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், டோக்கியோ 2020 ஒலிம்பிக் கிராமம் இன்று அதிகாரப்பூர்வமாக அதன் கதவுகளைத் திறந்து, இந்த ஆண்டின் விளையாட்டுக்களுக்கு முன்னதாக உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களை வரவேற்கத் தொடங்கியது,
டோக்கியோ ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 11000 விளையாட்டு வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
ஜப்பானில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் டோக்கியோவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீரர்கள் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது.