கோயம்புத்தூர்

ன்று கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதையொட்டி பாஜகவைக் கண்டித்துக் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும் கோவையில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணிக்குக் கோவை சிவானந்தா காலனியில் இந்த கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றுக் கண்டன உரையாற்றுகிறார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகதீன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்துக் கண்டன உரையாற்ற உள்ளனர்.

கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட உள்ளது.