மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரை முடிக்க, ஈரானின் உரிமைகளை அங்கீகரித்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸிஸ்க்கின் கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசியதாக தெரிவித்த அவர், “பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்ற உறுதிப்பாட்டை மீண்டும் தெரிவித்துள்ளேன். இந்தப் போரை தொடங்கியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரை முடிக்க ஒரே வழி – “ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடக்காதபடி சர்வதேச உறுதிமொழி அளிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆசியாவில் நடைபெறும் இந்த மோதல் தற்போது 13வது நாளாகத் தொடர்கிறது. இந்த மோதல் நீண்டகால பொருளாதார மற்றும் ராணுவ மோதலாக மாறக்கூடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் ஆலோசகர் அலி பதாவி கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சோர்வை ஏற்படுத்தக்கூடிய நீண்டகால போரை எதிர்கொள்ள நேரிடலாம். அப்படி நடந்தால் அது அமெரிக்க பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதற்றத்தின் நடுவே, உலகின் முக்கியமான கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை பகுதியில் வணிகக் கப்பல்களைச் சேர்ந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

ஈரான் அதிகாரிகள் கூறுகையில், எச்சரிக்கையை புறக்கணித்து அந்த நீரிணைக்குள் நுழைந்த இரண்டு கப்பல்களை தங்களது படைகள் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவித்தனர்.

அவை, லைபீரியா கொடியுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரோம் என்ற கண்டெய்னர் கப்பல் மற்றும் தாய்லாந்து சரக்கு கப்பல் Mayuree Naree ஆகிய கப்பல்கள்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ஓமன் கடற்படை 20 கப்பற்படையினரை மீட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் 3 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) முக்கியமான நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது.

அதன்படி, உறுப்புநாடுகள் தங்களது மூலதன எண்ணெய் களஞ்சியங்களில் இருந்து 40 கோடி பீப்பாய் எண்ணெயை சந்தைக்கு வெளியிட ஒப்புக்கொண்டுள்ளன.

IEA இயக்குநர் பாதிஹ் பிரோல் கூறுகையில், “சந்தையில் ஏற்பட்ட உடனடி பாதிப்புகளை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் சீராக இருக்க முக்கியமானது ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதே” என்றார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு விரைவில் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக விரைவில் அந்த கடல் பாதையில் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும்” என்றார்.

மேலும் Axios ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இந்தப் போர் விரைவில் முடிவடையலாம் என்றும், “தாக்குவதற்கு அமெரிக்க படைகளுக்கு இலக்குகள் பெரும்பாலும் எதுவும் மீதமில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]