சென்னை: தமிழில் படித்தோரின் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக டிஎன்பிஎஸ்சி தொடர்ந்துள்ள வழக்கை தமிழ்நாடு அரசு திரும்பபெற வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
“தமிழக அரசுப் பணிக்கான கல்வித் தகுதி முழுவதையும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு (Person Studied in Tamil Medium-PSTM) 20% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இழைக்கப்படும் மிகப்பெரிய சமூக அநீதியாகும்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏற்கெனவே பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் அஞ்சல் வழியில் தமிழ் மொழியில் படித்துவிட்டு, அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும்படி சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இந்த 20% இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்திற்கு கிட்டத்தட்ட 9 மாதப் போராட்டத்திற்குப் பிறகே தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு முறைகேடாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை 20.01.2020 அன்று வெளியிடப்பட்ட டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி பணிக்கான போட்டித் தேர்விலிருந்தே செயல்படுத்தும்படி 22.03.2021 அன்று தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நீதி வழங்கும் நோக்குடன் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். தமிழக அரசுக்கு 18 துணை ஆட்சியர், 19 காவல் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 69 முதல் தொகுதி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்விலும் இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.
ஆனால், அதற்கு மாறாக உயர்நீதிமன்றத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இதற்காக தேர்வாணையம் கூறியுள்ள காரணங்கள் ஏற்க முடியாதவை. தமிழக அரசின் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாகவே போட்டித்தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பே முதல் நிலைத் தேர்வுகள் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
முதல் நிலைத் தேர்வில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதில் சட்டத்திருத்தத்திற்கு முன்பிருந்த விதிகள் தான் கடைபிடிக்கப்பட்டன என்பதால், இப்போது புதிய விதிகளின்படி தமிழ் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஒரு பிரிவு மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று உயர்நீதிமன்றத்தில் தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. இது சரியல்ல.
தமிழக அரசின் புதிய சட்டத்தை பின்தேதியிட்டு செயல்படுத்தினால், பட்டப்படிப்பு வரை ஆங்கிலத்தில் படித்து, கூடுதலாக ஒரு பட்டப்படிப்பை தமிழில் படித்து தமிழ் இட ஒதுக்கீட்டை முறைகேடாக அனுபவிக்க முயல்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தேர்வாணையம் கூறுகிறது. தமிழ் இட ஒதுக்கீட்டை முறைகேடாக அனுபவிப்பவர்களை தடுக்க வேண்டும் என்பது தான் புதிய சட்டத்தின் நோக்கமாகும்.
அவ்வாறு இருக்கும் போது சட்டம் இயற்றப்பட்ட தேதிக்கு முன்பாக போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக, தமிழ் இட ஒதுக்கீடு ஆங்கிலவழியில் படித்தவர்களால் சூறையாடப் படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அத்தகைய அநீதிக்கு தேர்வாணையம் துணை போகக்கூடாது.
2016-19 கால கட்டத்தில் முதல் தொகுதி பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 22 பணிகளில் 11 பணிகளை ஒன்றாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்து, இறுதியில் பெயரளவில் ஒரு பட்டப்படிப்பை அஞ்சல் வழியில் தமிழில் படித்தவர்கள் கைப்பற்றியுள்ளனர். இது மிகப்பெரிய சமூக அநீதி. அத்தகைய அநீதி மீண்டும் இழைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.
புதிய சட்டத்தின்படி முதல் தொகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டால், 3 மாவட்ட துணை ஆட்சியர்கள், 2 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 3 கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள், 2 ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்கள் என மொத்தம் 10 முதல் தொகுதி பணிகள் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.
அது தான் உண்மையான சமூகநீதியாகவும், தமிழ் நீதியாகவும் இருக்கும். அதை உறுதி செய்யும் வகையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத் திருத்தத்தை பின்தேதியிட்டு செயல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.