சென்னை

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை மின் நிறுத்தம் செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தடை விதித்துள்ளார். 

இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, கோடைக்காலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தற்போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு கோடைக்கால மின் தேவை எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும் என்று கூறி உள்ளார்.  மேலும் அவர் தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.