விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீதான நடவடிக்கை குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறையில் புதிய மாற்றங்களை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் விரைவில் வரன்முறைப் படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, அடையார் ஆகிய சென்னையின் முக்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி ஆய்வில் 2007 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் தளங்கள், வாகன நிறுத்த இடம் இல்லாமல் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டுக்குப் முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப் படுத்த முதல்முறையாக பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டது இதுவரை இத்திட்டத்தை அமல்படுத்த முடியாமல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) திணறி வருகிறது.

இந்தநிலையில் 2007 ம் ஆண்டுக்கு முன் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இரண்டாவது முறையாக 2017 ம் ஆண்டு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய முறைப்படுத்தல் திட்டத்தைக் கொண்டு வந்தது.

இதற்கும் பெரிதாக வரவேற்பு இல்லாததை அடுத்து தற்போது மூன்றாவது முறையாக விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2019 ம் ஆண்டு வரை கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு கட்டிடங்களின் அளவு, வழிகாட்டி மதிப்பு மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் முறைப்படுத்தல் கட்டணங்களை நிர்ணயிக்கவும் தமிழக அரசின் நகரம் மற்றும் கிராம திட்டமிடல் சட்டத்தின் பிரிவு 113-C இன் கீழ் இந்த தளர்வை அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.