சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 7-ம் தேதி ரம்ஜான் நோன்பு தொடங்கும் என அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக ரமலான் நோன்பு திகழ்கிறது.
ஏழைகளின் பசியை உணராமல் வசதி படைத்தவர்கள் சொகுசாக வாழ்வதும், ஏழைகள் குடல் கொதித்து பட்டினியால் சாவதும் சமத்துவம் ஆகாது. எனவே, பசியின் அருமையை உணர்த்தி, பசித்தவருக்கு அன்னமிடும் நற்பண்பை செல்வந்தர்களுக்கு உணர்த்தவும், பசியின் கொடுமையை செல்வந்தர்களும் அனுபவித்து உணர்ந்து, தான- தர்மங்களை தொடரவும் இஸ்லாத்தில் நோன்பு மூன்றாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாலையில் எழுந்து, “ஸஹர்” எனப்படும் கதிரவனின் உதய வேளை முடிவதற்குள் சாப்பிட்டு முடித்தபின், “மஹ்ரிப்” எனப்படும் மாலை தொழுகை நேரம் வரை சுமார் 14 மணி நேரம் ஒருதுளி நீரைக்கூட பருகாமல் உடலை வருத்தி, படைத்தவனை நினைத்து, அவனை ஐந்து வேளையும் வணங்கியவர்களாய் மாதத்தின் 30 நாட்களையும் கழிப்பதே ரமலான் நோன்பின் சிறப்பாகும்.
ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் தெரியாததால், திங்கள்கிழமை அன்று முதல் பிறையாக கணக்கிட்டு வரும் செவ்வாய்க் கிழமை ரம்ஜான் மாத முதல் நோன்பு கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.