கொல்கத்தா: மே மாதம் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று  மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க சட்டசபைக்காக முதல் கட்ட தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான பிரசாரத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் புருலியா பகுதியில் முதலமைச்சர் மமதா பானர்ஜி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: திரிணமூல் ஆட்சியில் இருக்கும். நீங்கள் தொடர்ந்து இலவச ரேஷன் பொருட்களை பெறுவீர்கள். நாங்கள் உங்கள் வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்குவோம்.

வரும் மே மாதத்திற்கு பிறகு நீங்கள் ரேஷன் கடைக்கு வந்து செல்ல வேண்டியது இல்லை. எனக்கு பாஜக தேவையில்லை, காங்கிரஸ் – இடதுசாரிகளை விரும்பவில்லை, பாஜகவிடமிருந்து விடைபெறுங்கள் என்று கூறியபடி எதிர்கட்சிகளுக்கு எதிராக மமதா முழக்கங்களை எழுப்பினார்.