திருமலை:
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் இன்று நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.
காலை மாலை என இரு வேளைகளிலும் ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெவ்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 9வது நாளான இன்று காலை திருமலையில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியை ஒட்டி சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புஷ்கரணிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வேத பண்டிதர்கள் வேதங்களை முழங்க தீர்த்தவாரி நடந்தது.
அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என விண்ணதிர பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தீர்த்தவாரி முடிந்தவுடன் ஏராளமான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடினர். கடந்த 8 நாட்களாக கோலாகலமாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.