பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தல் அளித்த பாஜக எம்.பி.-யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய மல்யுத்த வீரர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகளை பிரியங்கா காந்தி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசி அவர், “பிரதமரிடம் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, போராடிவரும் மல்யுத்த வீரர்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என்றால், அவர் ஏன் அவர்களுடன் பேசவில்லை அல்லது அவர்களை சந்திக்கவில்லை.

அரசாங்கம் ஏன் அவரை (பிரிஜ் பூஷன் சரண் சிங்) காப்பாற்ற முயற்சிக்கிறது…” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “இந்த சிறுமிகள் பதக்கம் பெற்றால், அனைவரும் ட்வீட் செய்கிறார்கள், அவர்கள் நம் நாட்டின் பெருமை என்று கூறுகிறார்கள், ஆனால் இப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து போராடும் போது, யாரும் அவர்களுக்காக செவிகொடுக்க தயாராக இல்லை” என்றும் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி காவல்துறை நேற்றிரவு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பேசிய பிரியங்கா காந்தி, “எஃப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவற்றின் நகலை வீராங்கனைகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

முன்னதாக எஃப்.ஐ.ஆர் குறித்து பிரிஜ் பூஷன் சிங்-கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் “இதுவரை என்னிடம் எஃப்.ஐ.ஆர் நகல் வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.