மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில்  பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த தவறிய திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இணைய தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கனிமொழி திருப்பரங்குன்றம் மலைமீது இருப்பது  தீபத்தூண் அல்ல எல்லை கல் என கூறியது, இந்து மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், கனிமொழி குறித்து சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,   திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின்போது,  தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தவறாக  குறிப்பிட்டிருந்தார். கனிமொழியின் எல்லைகல்  என்ற பேச்சை கடுமையாக சாடியிருந்தார். இதனால், திமுகவினர் அவர்மீது புகார் கொடுத்தனர். தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் என்பவர் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கார்மேகத்தின் பேட்டியால், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதாக கூறப்பட்டது. இதையடுத்து. இதையடுத்து,  பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் மீது  புகார் பதிவு செய்த காவல்துறையினர்,  அசிங்கமாக திட்டுதல் (பிரிவு 79), அவதூறு பரப்புதல் 196(1), பொய்யான கருத்தை சொல்லி இரு தரப்புக்கு மோதலைத் தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.

காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் காவல்துறையினராலேயே பிரச்சினை உருவானது என்று குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருப்பத பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]