மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு‘ விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரிக்கு ஒத்தி வைத்தது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம், மலைப்பகுதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகிய மூன்று தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள்மீது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, 5வது நாளாக விசாரித்து வருகிறது.
டிசம்பர் 18ந்தேதிநடைபெற்ற விசாரணையின்போது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘தீபத்தூண் குறித்து அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தர்கா என்பது தனிப்பட்டது. சர்வே மற்றும் வருவாய்த்துறை ஆவணங்களின்படி நிறைய கல் தூண்கள் திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தீபத்தூண் என்பதற்கு மனுதாரர் தரப்பில் எந்த விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. தமிழக அரசு எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்று எதிர் தரப்பு கூறுவது ஏற்புடையது அல்ல. இதற்கு முன் விளக்கு ஏற்றிருக்கலாம். ஆனால், அது தீபத்தூண் இல்லை.
1923 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவில், மலை உச்சியில் தர்கா உள்ளது. இதற்கு பிறகு எந்தவித கட்டுமானமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே, தீபத்தூண் எப்பொழுது வந்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவு எந்த விதமான முகாந்திரம் இல்லாமல் ஆதாரங்கள் இல்லாமல் பிறப்பித்துள்ளார். மேலும், தனது உத்தரவில் மனுதாரர் தனது கோரிக்கைகளை தெளிவாக கோரவில்லை என தெளிவாக கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை கடைப்பிடித்துள்ளது. அரசாங்க சொத்தில் தனி நபர் உரிமை கோர இயலுமா? தனிநபர் தீபம் ஏற்ற உத்தரவிட்ட தூண் அவர் சொத்து இல்லை’ என வாதிட்டார்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “ திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற வழக்கை தனி நீதிபதி விசாரிக்க அதிகாரம் இல்லை என்று எதிர் தரப்பினர் கூறுவது ஏற்புடையது அல்ல. மலை உச்சியில் கோயில் கள்ளத்தி மரம் உள்ளது. அதன் அருகில் தர்கா தரப்பில் கொடி ஏற்றப்படுகிறது. கோயில் புத்தகத்திலேயே மலை உச்சியில் உள்ள மரத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே, இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து தர்கா தரப்பில், ‘கோயில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மத்திய தொல்லியல் துறை முடிவு செய்ய முடியாது’ என்றனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஜன.7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
[youtube-feed feed=1]