புதுச்சேரி:

5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை, பழைய முறையே தொடரும்  என்று புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கையின்படி, 5, 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று மத்தியஅரசு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. இதற்கு  பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், முதலில் எதிர்ப்பு தெரிவித்த தமிழகஅரசு பின்னர், மத்திய அரசிடம் மண்டியிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில்  நடப்பு ஆண்டு  5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில்,  புதுச்சேரியில் பொதுத்தேர்வு இல்லை அம்மாநில அரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மாநில கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்,  புதுச்சேரியில் 5 மற்றும் 8 -ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் இல்லை.  பழைய முறையிலேயே மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும்.

அதே வேளையில்,  மாணவர்கள் தேர்வு எழுதும் பள்ளிகளில் அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட மாட்டார்கள்.  வேறு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள்  பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு கூறினார்.