சென்னை: சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் சபாநாயகர் அப்பாவு  மாற்றம்  செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், ஓபிஎஸ் சட்டப்பேரவையை நிகழ்வுகளை புறக்கணிப்பர் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால், சட்டமன்றத்தை பொறுத்தவரையில் சட்டப்பேரவை தலைவரின் முடிவுதான் இறுதியானது என்றும் அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்படும். பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பார்கள்.

இந்த கூட்டத்தொடரில், மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்ட மசோதாவும் நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக அதிமுகவின் மோதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. சட்டமன்ற பேரவை விதி 6-ன் படி இக்கூட்டத்தொடரில் முந்தையே நிலையை தொடர சபாநாயக்கர் முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எதிர்கட்சித்துணை தலைவர் யார் என்பது குறித்து பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் எழுதிய நிலையில் சபாநாயக்கர் முடிவு செய்துள்ளார். இதனால் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.