சென்னை:
சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு அரசிடம் இருந்து மக்கள் முதலில் எதிர்பார்ப்பது, அமைதியைத்தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தர வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்குத்தான் உண்டு. எந்த ஒரு நாட்டிலும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்துவிட்டால், பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்துவிட்டால் அந்த நாட்டில் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால்தான் தொழில் சிறக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும்க் துறையாக இல்லாமல் – குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்றும் அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.