சேலம்: பணி இடமாற்றம் செய்து, டார்ச்சர் செய்து வந்த சேலம் நீதிபதியை, அவரது உதவியாளர் கத்தியால் தாக்கினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 4வது குற்றவியல் நீதிபதி பொன்பாண்டியை, அலுவலக உதவியாளர் பிரகாஷ் கத்தியால் தாக்கினார். இதனால் காயமடைந்த நீதிபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரகாஷை அஸ்தம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நீதிபதியாக பணி புரிந்து வருபவர் பொன் பாண்டியன். இவர் இன்று காலை வழக்கம்போல  நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள நீதிபதி அறையில் இருந்து பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அவரது ஊழியர்  பிரகாஷ் என்பவர் தனது கையில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு நீதிபதியை தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி பொன்பாண்டியன், கூச்சலிடவே, நீதிபதி அறைக்கு வெளியே இருந்த வழக்கறிஞர்கள் விரைந்து வந்து, பிரகாஷை பிடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பிரகாஷை கைது செய்தனர். மேலும், உடனே சம்பவ இடத்துக்கு வருகை தந்த  மாவட்ட நீதிபதி குமரகுரு சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

விசாரணையில், பிரகாசின் இடமாறுதலுக்கு நீதிபதி பொன்.பாண்டியன் தான் காரணம் என்றும், அவ்வப்போது தேவையற்ற வேலை கொடுத்து, டார்ச்சர் செய்து வந்த நிலையில், தன்னை இடமாற்றம் செய்ததால் கடும் கோபத்தில் இருந்த பிரகாஷ், அவரை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.