2024ல் உலக மகா பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுவிஸ் வங்கியான யூ.பி.எஸ் நடத்திய பில்லியனர்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் வெளியானது.
கடந்த 10 ஆண்டுகளில் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
பில்லியனர்களின் எண்ணிக்கை 1,757யில் இருந்து 2,682 ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும் 268 பேர் பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர் என்றும் இவர்கள் அனைவரும் சுயதொழில் மூலமாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க பணக்காரர்களின் சொத்து மதிப்பு 58.5 சதவீதம் உயர்ந்து 6.1 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 27.6 சதவீதத்தில் இருந்து 40 சதவீதத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை பில்லியனர்களின் எண்ணிக்கை 153யில் இருந்து 185 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சொத்து மதிப்பு 905.6 பில்லியனாக உயர்ந்துள்ளது.
மேலும், 2015 முதல் 2024ஆம் ஆண்டு வரை பணக்காரர்களின் சொத்து 121 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தொழில்நுட்பம் சார்ந்த பணக்காரர்களின் சொத்து 3 மடங்கு அதிகரித்து, 788.9 பில்லியன் டாலரில் இருந்து 2.4 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் பில்லியனர்களின் சொத்து மதிப்பு 16.8 சதவீதம் சரிந்து, 1.8 ட்ரில்லியன் டாலராக குறைந்துள்ளது.
அத்துடன் 588 ஆக இருந்த பில்லியனர்களின் எண்ணிக்கை 501 ஆக சரிந்துள்ளது. இதற்கிடையில் அரசியல் பதற்றங்கள், வர்த்தக தடைகள் மற்றும் உயர்ந்து வரும் செலவினத் தேவைகளால், அடுத்த 10 ஆண்டுகளில் நிலையற்ற உலகை எதிர்கொள்ள நேரிடும் என்று யூ.பி.எஸ் தெரிவித்துள்ளது.