உலகின் 12வது பணக்காரரான இந்தியாவின் முகேஷ் அம்பானி சமீபத்தில் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள யூரோ ஏர்போர்ட் பேசல்-மல்ஹவுஸ்-ஃப்ரீபர்க் (BSL)ல் அம்பானியின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஜெட் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
பறக்கும் அரண்மனை என்று வர்ணிக்கப்படும் இந்த ஜெட் விமானத்தில் ஒரு அரண்மனையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நவீன தொழில்நுட்பங்களுடன் அதன் உரிமையாளரின் இணையற்ற செல்வம் மற்றும் அந்தஸ்தின் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவத்துடன் ஆடம்பரமாக செய்யப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸின் பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 113.9 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ. 9,53,015 கோடி.
இந்தியாவின் நெம்பர் ஒன் பணக்காராக் குடும்பம் என்று வர்ணிக்கப்படும் அம்பானி குடும்பத்துக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீதம் அதாவது ரூ.25,75,000 கோடி சொத்து இருப்பதாக பார்க்லேஸ்-ஹுருன் இந்தியா தனது 2024ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முகேஷ் அம்பானி தற்போது புதிதாக வாங்கியுள்ள போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானம் அதன் செழுமை மற்றும் தொழில்நுட்ப வல்லமைக்கு பெயர் பெற்றது. இந்த விமானம், இரண்டு CFMI LEAP-18 இன்ஜின்களால் இயக்கப்படுகிறது.
போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானத்தின் அடிப்படை விலை $118.5 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 990 கோடி என்றபோதும் முகேஷ் அம்பானிக்காக இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அதன் அடிப்படை விலையில் இருந்து பலமடங்கு அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரத்தன் டாடா, குமாரமங்கலம் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளிட்ட பணக்காரர்களுக்கு இணையாக பல விமானங்களை வைத்திருக்கும் முகேஷ் அம்பானி புதிதாக வாங்கியிருக்கும் இந்த பறக்கும் அரண்மனை போன்ற ஜெட் விமானம் அவரது செல்வம் மற்றும் அந்தஸ்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.