ஜெய்ப்பூர்
வங்கி வாடிக்கையாளர்கள் வைப்பு நிதியில் செலுத்தப் பட்டுள்ள பணம் பத்திரமாக இருக்குமா என்பதை இந்த செய்தி விளக்குகிறது.
பல முதியோர்களும் இளைஞர்களும் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக வைப்பது பாதுகாப்பானது என நினைக்கின்றனர். ஆனால் அவற்றுக்கும் பாதுகாப்பு இல்லை என தற்போது தகவல்கள் வந்துள்ளன. இது பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
உதயப்பூர் பகுதியை சேர்ந்த சோகன் தாஸ் என்னும் 75 வயது விவசாயி தன்னிடம் இருந்த ஒரு சிறு நிலத்தை விற்று ரூ. 7,50,000 பணம் வைத்திருந்தார். அவருடைய 65 வயதான மனைவிக்கு தன் காலத்துக்குப் பின் இந்தப் பணம் உபயோகப் படும் என நினைத்து அந்தப் பணத்தை வைப்பு நிதி (fixed Deposit) யாக ஐசிஐசிஐ வங்கியில் டிபாசிட் செலுத்தி உள்ளார். இது ஐசிஐசிஐ வங்கியின் உதயப்பூர் கிளையில் செலுத்தப்பட்டுள்ளது.
சோகன்தாஸ். “நான் வைப்பு நிதியில் பணத்தை போட்டு சுமார் 9 மாதம் கழித்து எனக்கு வங்கியின் மும்பை அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் என்னை உடனடியாக ரூ. 7,50,000 செலுத்த வேண்டும் எனவும் இல்லை எனில் நான் ஏற்கனவே செலுத்திய ரூ. 7,50,000 எனக்கு கிடைக்காது எனவும் கூறினார். நான் பயந்து போய் ஒரு வழக்கறிஞரிடம் எனது வங்கி ஆவணங்களை காட்டினேன். அவர்தான் எனக்கு அது வைப்பு நிதி அல்ல, காப்பிட்டு பாலிசி எனக் கூறினார். அதன்படி ஒவ்வொரு வருடமும் நான் ரூ.7,50,000 செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
நான் அதிர்ந்து போனேன். நானும் என் மனைவியும் எங்கள் முதுமை காரணமாக எந்தப் பணியும் செய்ய முடியாது. எங்களுக்கு மாத மருத்துவச் செலவே ரூ. 5000 லிருந்து ரூ. 7000 வரை ஆகிறது. அப்படி இருக்க நாங்கள் எப்படி இவ்வளவு தொகையை ஒவ்வொரு வருடமும் செலுத்த முடியும்” எனக் கூறி உள்ளார்.
இது போல நூற்றுக்கணக்கான பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பல விவசாயிகள், தொழிலாளிகள், மற்றும் வயதானவர்கள் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவார்கள். அதிலும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களிடம் என்ன என விவரிக்காமலே வங்கி அதிகாரிகள் பல படிவங்களில் கையெழுத்து வாங்கி விடுகின்றனர். வாடிக்கையாளர்களிடம் இது வைப்பு நிதிகான படிவம் என பொய் சொல்லப்படுகிறது. அதை நம்பி அவர்கள் கையெழுத்து இடுகின்றனர்.
இது குறித்து ஐசிஐசிஐ புருடென்சியல் பிரிவில் பணி புரிந்த நிதின் பால்சந்தானி என்பவர் ராஜஸ்தான் விசேஷ காவல் பிரிவிடம் புகார் அளித்துள்ளார். அதையொட்டி அந்தப் பிரிவு விசாரணையில் இறங்கியதில் ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐசிஐசிஐ புருடென்சியல் நிதி ஆகிய இரு பிரிவுகளிலும் உள்ள பல அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த இருபிரிவின் அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இது குறித்து நிதின் பால்சந்தானி, “இந்த வங்கி அதிகாரிகள் காப்பீடு நிறுவனத்துடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி இவர்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இத்தனை பாலிசிகள் விற்க வேண்டும் என கூறி உள்ளன. அதை அடைய இந்த அதிகாரிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் வைப்பு நிதி கணக்கு துவங்க வரும் போது அந்தப் பணத்தை காப்பிட்டு பாலிசி பிரிமியமாக மாற்றி பதிந்து விடுகின்றனர். இவர்கள் பொய் சொல்வதை எழுதப் படிக்க தெரியாத அந்த அப்பாவி வாடிக்கையாளர்கள் புரிந்துக் கொள்வதில்லை.
கணவனின் மறைவையொட்டி கிடைத்த காப்பீட்டு தொகையை தனது எதிர்காலத்துக்கு தேவை என வங்கியில் செலுத்த வரும் விதவைகளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. பல விதவைகள் பெயரில் வருடத்துக்கு லட்சக்கணக்கான தவணைத் தொகை செலுத்தும் வகையில் பாலிசிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அவ்வளவு வருமானம் இருப்பதே கிடையாது. எனவே அடுத்த தவணையை செலுத்தாததால் அவர்கள் ஏற்கனவே செலுத்திய தொகையை இழக்க நேரிடுகிறது. இந்த மோசடி கடன் பெறுவோரிடமும் நடைபெறுகிறது. கடன் தொகையில் சிறிது வைப்பு நிதியில் போடக் சொல்லி அறிவுறுத்தப் படுகிறது. ஆனால் அந்தத் தொகையும் காப்பீடு பாலியில் போடப் பட்டு விடுகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை தெரிவித்த பால்சந்தானி மீது ஐசிஐசிஐ புருடென்சியல் அதிகாரிகள் பண மோசடி புகார் அளித்து அதனால் அவர் ஒரு மாதம் சிறையில் இருக்க நேர்ந்துள்ளது. அதன் பிறகு அவர் மீது குற்றம் ஏதும் இல்லை என அவர் நிரூபித்து வெளியே வந்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மேல் மேலும் பல புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன. பண மோசடி, நிறுவனத்தின் முக்கிய விவரங்களை திருடியது, போன்ற பல புகார்கள் அவர் மீது அளிக்கப் பட்டுள்ளன. இது குறித்து பால்சந்தானி இந்தப் புகார்கள் ஏற்கனவே நிறுவன விசாரணையில் ஆதாரமற்றவை என நிரூபிக்கப் பட்டுள்ளதாகவும், தற்போது தேவை இல்லாமல் மீண்டும் அதே புகார்களை கூறப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.
Coutesy : the wire
For further details refer this : https://thewire.in/208356/icici-bank-fraud-fixed-deposit-insurance-policy-rajasthan/