ஈரோடு: ‘தீய சக்தி திமுக’வுக்கும், ‘தூயசக்தி தவெக’வுக்கும்தான் போட்டி என ஈரோட்டில் ஆவேசமாக பேசிய தவெக தலைவர் விஜய், பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
அவது உரையின்போது, எம்.ஜி.ஆரும் மேடம் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் சொல்லி தி.மு.க-வை காலி பண்ணாங்க.. ஏன் இவங்க இப்படி பயங்கரமா திட்டுறாங்கனு நான் கூட யோசிப்பேன். ஆனா இப்பதான புரியுது. நானும் அவங்க சொன்னதையே நானும் இப்போ ரிபீட் பண்றேன். திமுக ஒரு தீயசக்தி.. தீய சக்தி.. தீய சக்தி என கடுமையாக சாடினார்.

கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே இன்று விஜய் தவெக மக்கள் சந்திப்பு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான விஜயபுரி அம்மன் கோயில் இடத்தில், த.வெ.க.வினர் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த பொதுக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், சமீபத்தில் தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சரும், தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய செங்கோட்டையன், ‘ஆண்டுக்கு 500 கோடி வருவாயை விட்டு விட்டு மக்களுக்காக வந்திருக்கிறார்; இதற்கு முன் புரட்சித்தலைவரைப் பார்த்தேன்; இன்றைக்கு விஜயை காண்கிறேன்’, 234 தொகுதிகளிலும் அவர் கைகாட்டுபவர்தான் வெற்றி பெறுவார் என்றார்.
இதைத்தொடர்ந்து த வெக தலைவர் விஜய் பேசினார். அப்போது, தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக சாடினார்.
உங்களை நம்பி தான் வந்திருக்கிறேன், வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன். சூழ்ச்சிக்காரர்களுக்கு தெரியாது, இது 30 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்ற உறவு. பெற்ற தாய் தரும் தைரியத்தை நண்பா, நண்பிகள், தோழர்கள், தோழிகள் தருகிறார்கள்.
“நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் வைத்து தான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காளிங்கராயன் அணை. காளிங்கராயன் கால்வாய். அந்தப் பணிகளில் அவர் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது அவர் சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய், மகனே காளிங்கா தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரை இருக்கிறது. மோர் விற்ற காசு இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு சென்று கால்வாய் வெட்டு என்றாராம். பெற்ற தாய் கொடுக்கும் தைரியத்திற்கு இணையாக வேறு எதுவும் இல்லை. அதை வைத்துக்கொண்டு எதையும் சாதிக்க முடியும்.
அப்படி ஒரு தைரியம் தான் நீங்கள் கொடுக்கிறீர்கள். இதை எப்படி கெடுக்கலாம், எப்படி பிரிக்கலாம், விஜய் மேல் சூழ்ச்சிகளை செய்து எப்படி மக்களை நம்பவைக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை. இது இன்று நேற்று வந்த உறவில்லை. இது கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலான உறவு. அதனால் நீங்கள் என்ன செய்தாலும் இந்த விஜயை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள்.
காளிங்கராயன் அணை கட்டுவதற்காக பவானி சென்று பார்க்கும்போது ஒரு பாம்பு அங்கு உட்கார்ந்ததாம். அந்த இடத்தில்தான் அணை கட்ட ஆரம்பித்தாராம். அந்த பாம்பு சென்ற இடத்தில்தான் கால்வாய் வெட்டினாராம். சில வாய்மொழிக் கதைகள் சொல்கிறார்கள். தண்ணீர் சேர்த்து வைத்து குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வழிவகுப்பது என்பது எவ்வளவு நல்ல விசயம். இவற்றையெல்லாம் செய்துவிட்டு கதை சொன்னால் பரவாயில்லை. ஆனால், எதையும் செய்யாமல் கதை மட்டும் சொல்கிறார்கள்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் அந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். வள்ளுவர் கோட்டத்தில் காட்டிய அக்கறையை மக்களின் வாழ்வாதாரத்திலும் காட்டலாமே. ஏன் காட்ட மாட்டேன் என்கிறீர்கள். அரசாங்கம் நடத்துகிறீர்களா கண்காட்சி நடத்துகிறீர்களா?

நமது அரசியல் எதிரி திமுக; கொள்கை எதிரி பாஜக. தவெக ஒரு பொருட்டில்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?
கொள்ளையடித்து வைத்துள்ள பணம்தான் உங்களுக்குத் துணை; ஆனால் எனக்கு இந்த மாஸ் தான் துணை. களத்தில் உள்ள எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க நேரமில்லை.
எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள். நீட் ரத்து, கல்வி கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியமாக 100 ரூபாய் கொடுப்போம் என்று அடித்து விட்டார்கள். இன்றுவரை ஏதாவது செய்தார்களா? இவர்கள் எப்போதுமே சொல்வது ஒன்று, செய்வது ஒன்றுதான்/
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திருப்பிப்போட்ட சீர்திருத்த நெம்புகோல் பெரியார். அரசியல் சட்டத்திருத்தை மேற்கொள்ள போராட்டம் நடத்தியவர். நம் கொள்கை தலைவர் தந்தை பெரியார். அப்போது அண்ணாவும் எம்ஜிஆரும் யார். பெரியாரிடம் இருந்து கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட அண்ணா எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறைகளை எடுத்துக்கொண்டோம்.
அண்ணாவும் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை யாரும் எடுக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குதான் த.வெ.க ஒரு பொருட்டே இல்லை என்று சொல்லிக்கொண்டு ஏன் புலம்புகிறீர்கள். பெரியாரின் பெயரையும் அவரது கொள்கையையும் பின் தொடருவதாக சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கின்றனர். தயவு செய்து பெரியாரின் பெயரைப் பயன்படுத்தி கொள்ளை அடிக்காதீர்கள்.
பெரியாரின் பெயரை சொல்லி கொள்ளை அடிப்பவர்கள்தான் நம் அரசியல் எதிரி. எதிரிகள் யாரென்று சொல்லிவிட்டு களத்திற்கு வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். 2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்க்க முடியும். சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
எத்தனை வாக்குறுதிகள் கொடுத்தார்கள். சொன்னார்களே செய்தார்களா? மஞ்சள் விவசாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு நெல்லுக்கு அரசு விலை நிர்ணயிக்கிறது. ஆனால், அதிலும் ஊழல். கொள்முதல் ஒழுங்காக நடப்பதில்லை
24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள்.
அண்ணாவும், எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்துகள். அவர்களை எங்களவர்கள் என யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றார்.
விஜய் அரசியல் பேசவில்லை என்கிறார்கள். 10 நிமிடம்தான் பேசுகிறார் என்கிறார்கள்., நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை சந்தித்து அவர்களது பிரச்னைகளை பேசுவது அரசியல் இல்லாமல் வேறு என்ன?
நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசங்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மக்கள் காசில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்பீர்கள்,. ஓசியில் போகிறீர்கள் என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான்.
மக்களுக்கான வாழ்வாதரம் உயருவதற்கான திட்டங்களை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அரசாங்கம்தான் நல்ல அரசாங்கம். இதைத்தான் அன்று சொன்னோம். எப்படி செயல்படுத்துவீர்கள் என்று கேட்கிறார்கள், வாயிலேயே வடை சுடுவதற்கு நாங்கள் என்ன திமுகவா?
எல்லோருக்கும் வீடு கட்டிக்கொடுப்போம் என்றோம். எங்கள் ஆட்சியிலேயே கொடுத்துவிட்டோம் என்கின்றனர். இந்த ஊரில் வாடகைக்கு இருப்பவர்களே இல்லையா? எல்லோரும் டிகிரி படிக்க வேண்டுமென்று சொன்னோம். நாங்களே படிக்கவைத்து விட்டோம் என்கின்றனர். அது உண்மையானால் பள்ளி அளவில் அதிக மாணவர்கள் இடைநிற்பது யாருடைய ஆட்சிக்காலத்தில்.
காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீர்களே? எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. இந்த விஷயங்களை எல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னால், அவதூறு பரப்புகிறார்கள்.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஏன் திமுகவை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போதுதான் புரிகிறது. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.
திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி.. த.வெ.க ஒரு தூய சக்தி..
தீய சக்தி திமுகவுக்கும், தூய சக்தி த.வெ.கவுக்கும் இடையே தான் போட்டியே. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்திமிக்க நம்மால் தான் முடியும்.
திமுக அரசு, ‘வள்ளுவர் கோட்டத்தில் காட்டுகிற அக்கறையை மக்கள் வாழ்வாதாரத்தில் காட்டலாம் இல்லையா? இவங்க கவர்மெண்ட் நடத்துறாங்களா? இல்லை, கண்காட்சி நடத்துறாங்களா?’ என மறைமுகமாக பராசக்தி திரைப்படம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்காட்சியை சாடியவர், அண்ணன் செங்கோட்டையன் நம்மக்கூட வந்து சேர்ந்தது மிகப் பெரிய பலம். அவரைப்போலவே இன்னும் நிறைய பேர் சேர இருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் உரிய அங்கீகாரத்தை கொடுப்போம்” என்றவர்,
“உங்களை நம்பி தான் வந்துள்ளேன் என்கூட நிப்பீங்கல்ல’ என கூட்டத்தை பார்த்து கேட்ட விஜய் உடனே திரும்ப கூட்டத்தில் இருந்து வந்த சத்தத்தை கேட்டதும், “இந்த சத்தம் தான்.. வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருப்பேன்.. நன்றியோடு இருப்பேன்’’.
இவ்வாறு பேசினார்.
[youtube-feed feed=1]