புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86.
உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்றிரவு காலமானார்.
ரத்தன் டாடா 1937-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவரது தந்தை ஜாம்ஷெட்ஜி டாடாவின் பேரனான நாவல் டாடா.
1955-ஆம் ஆண்டு ரத்தன் டாடாவுக்கு 17 வயதானபோது, கட்டுமானமும் பொறியியலும் கற்க அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
உயர்கல்விக்குப் பிறகு, 1962-ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தில் உதவியாளரகச் சேர்ந்தார். அதில் பல பதவிகளை வகித்த பின் 1974-இல் டாடா நிறுவனத்தின் இயக்குநரானார்.
1975-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.
பின்னர் 1981-ஆம் ஆண்டு டாடா நிறுவனங்களின் தலைவராக நியமிகப்பட்டார் ரத்தன் டாடா.
அதன்பின் 1991-ஆம் ஆண்டு, ஜே.ஆர்.டி டாடாவுக்குப்பின் டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளைகளுக்குத் தலைவரனார்.
இந்தியத் தொழிற்துறைக்கு அவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக 2008-ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது.