கொல்கத்தா: எனக்கும்  எனக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக பாஜக சதி செய்கிறது என பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

நந்நிகிராம விபத்துக்கு பிறகு, நேற்று பங்குரா பகுதியில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சக்கரநாற்காலியுடன் வந்து கலந்துகொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் ஆணையத்தின் அன்றாட வேலைகளில் தலையிடுவதாகவும்,  “உள்துறை அமைச்சர் நாட்டை நடத்துவாரா அல்லது யார் கைது செய்யப்படுவார் அல்லது தாக்கப்படுவார் என்று முடிவு செய்வாரா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.  தேர்தல் ஆணையத்தை நடத்துபவர் யார்? அமித்ஷா, அது நீங்கள் அல்ல என்று நம்புகிறேன்.  எங்களுக்கு சுதந்திரமான நியாயமான தேர்தல் தேவை. ஆனால் தேர்தல் ஆணையத்தின் அன்றாட வேலைகளில் அவர் தலையிடுகிறார்” என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் ஆறு மாதங்களாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் எந்த அமைச்சரும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அனைத்து அமைச்சர்களும் மேற்குவங்காளத்தில் உள்ளனர். இங்குள்ள ஹோட்டல்களில் தங்கி கொண்டு என்னையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் எப்படி அழிப்பது. திரிணாமுல் காங்கிரஸ் மீது எப்படி வழக்குகளை பதிவு செய்வது என சதி செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடி, தனது பெயரில் ஒரு விளையாட்டு அரங்கத்தை உருவாக்குகிறார். பின்னர் தன் பெயரில் ஒரு சாலையை உருவாக்குவார். அதன் பின் இந்த நாட்டுக்கே அவரது பெயரை வைப்பார். அவர்களுக்கு நாட்டு மக்கள்மீது அக்கறை இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.