தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், அருள்மிகு பாண்டுரங்கன் ஆலயம்

பாண்டுரங்கன் ஆஸ்ரமம் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமையப் பெற்றுள்ளது. இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ள இவற்றில் பெரும்பான்மையான இடங்கள் பசு வளர்ப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. தினமும் பசு வழிபாடான கோபூஜைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

ஆஸ்ரமத்தின் செயல்பாடுகளால் கவரப்பட்ட இப்பகுதி மக்கள் தங்கள் நிலப்பகுதியை ஆஸ்ரமத்தின் செயல்பாட்டிற்கு தர மனமாற முன்வந்து ஆஸ்ரமத்தின் பணிகளை விரிவடையச் செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் பெருமைமிக்க ஆதீனங்கள் அமைந்து ஆன்மீக பணியாற்றும் நிலையில் மேலும் பக்கபலமாக இக்கோயில் இப்பகுதியில் அமைந்திருப்பது பக்தர்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டு தோறும் ஏழை மாணவர்கள் ஆயிரம் பேருக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படுகிறது. மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.

தல சிறப்பு:

பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.

பிரவேச துவார், மகாதுவார், வசந்த மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் ஆகிய பிரிவுகள் கோயிலில் உள்ளன. மண்டபங்கள் அனைத்தும் தூண்கள் எதுவும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமானது. ஆடியோ, வீடியோ, ஏசி, முதியவர் களுக்காக லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

6 ஆயிரம் சதுர அடி பரப்பிலான வசந்த மண்டபத்தின் மேல்தளம், பைபரால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த மண்டபத்தின் முனைப்பகுதியில் மின் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள மகா மண்டபத்தின் மேல் பகுதியில் பாண்டுரங்க பக்தர்களின் சிலைகள் உள்ளன. அருகில் பள்ளியறை உள்ளது.

600 சதுர அடி பரப்புள்ள அர்த்தமண்டபத்தில் ஹரிதாஸ் சுவாமி, கிருஷ்ணப்ரேமி சுவாமி, ஞானானந்த சுவாமி படங்கள் இடம் பெற்றுள்ளன.

70 அடி உயரமுள்ள இந்த மண்டபங்களில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம். கோயிலை வலம் வரும் வகையில் சிறப்பு வாசல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தலபெருமை:

பாண்டுரங்கனுக்கென தமிழகத்தில் சில கோயில்கள் இருந்தாலும், பண்டரிபுரம் போன்ற பிரம்மாண்ட தோற்றத்துடன் கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பலகோடி ரூபாய் செலவிலும், பகவான் நாமத்தின் மகிமையாலும் கோவிந்தபுரத்தில் உருவான பாண்டுரங்கன் கோயிலில் 2011 ஜூலை 15ம் தேதி குருபூர்ணிமா அன்று பரனூர் மகாத்மா ஸ்ரீகிருஷ்ணபிரேமி சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பகவான் நாமத்தின் பெருமையை நிலை நாட்டிய ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்ந்த புண்ணிய பூமி இது.

மின்சார வசதி:

ஆஸ்ரமத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை குறிப்பிட்ட அளவை தாங்களாகவே தயாரித்து கொள்ளும் வகையில் பசுக்களின் சாணத்தை கொண்டு தினமும் 12 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கென 10 ஆயிரம் சதுர அடியில் சிறப்பு பிளாண்ட் அமைத்துள்ளனர். தினமும் 10 மணி நேர மின் தேவை பூர்த்தியாகிறது.

தல வரலாறு:

பண்டரிபுரத்தில் வசித்த ஹரிதாசர் என்னும் பக்தர், ஆரம்பத்தில் பெற்றோர் சொல் கேளாதவராக இருந்தார். பாண்டுரங்கனின் நல்லருளால் மனம்திருந்தினார்.

பெற்றோருக்கு சேவை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டார். ஒருமுறை, பாண்டுரங்கனே நேரில் வந்து, அவரை வெளியே அழைத்தார். பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருகிறேன். அதுவரை அந்த செங்கல் மீது ஏறி நின்று காத்திரு, என்றார் ஹரிதாசர். பகவானும் காத்து நின்றார். விட்டல் என்றால் செங்கல். அதில் இருந்து பகவானின் திருநாமத்தையும் விட்டல விட்டல என்று சொல்லும் வழக்கம் உருவானது.

மகாராஷ்டிராவில் பாண்டுரங்கனுக்கு கோயில் இருப்பது போல, தென்னகத்தில் பிரம்மாண்டமான கோயில் உருவாக்க முடிவெடுக்கப் பட்டது. பிரம்மஸ்ரீ விட்டல் தாஸ்மகராஜ் இந்தக் கோயிலைக் கட்ட ஏற்பாடு செய்தார். பத்து ஆண்டுகளுக்கு முன் சிறிய அளவில் பாண்டுரங்கன் சந்நிதி மட்டும் இங்கிருந்தது. 2003 டிசம்பரில் பெரிய கோயில் கட்டும்பணி துவங்கி நிறைவடைந்துள்ளது.

சிறப்பம்சம்:

பாண்டுரங்கன் சன்னதி மண்டபத்தின் கீழ் தனி அறை உள்ளது. இதில் பக்தர்களால் எழுதப்பட்ட நூறு கோடி விட்டல் நாமாவளி புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த அறையை சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டுள்ளது.

பிரார்த்தனை:

கேட்டவர்க்கு கேட்ட வரம் அள்ளித்தரும் பாண்டுரங்கனிடம் எந்த வரம் கேட்டாலும் தருவார்.

நேர்த்திக்கடன்:

உலகாளும் பகவானுக்கு நாம் எதுவும் கொடுக்க வேண்டும் என்பதில்லை. இருந்தாலும் கோயில் நிர்வாகத்திடம் கேட்டு நமது நேர்த்திக்கடனை செலுத்தலாம்.

அமைவிடம்:

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில் 13 கி.மீ., தூரத்தில் கோவிந்தபுரம் அமைந்துள்ளது.