ஐதராபாத்
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியதற்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்
கடந்த 4 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டபோது, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.
இவர்கள் இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்து மூச்சு பேச்சின்றி சுயநினைவை இழந்தனர். காவல்துறையினர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று, ரேவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கினார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் நேற்று கும்பலாக திரண்டு வந்து, பூந்தொட்டிகளை தூக்கி போட்டு உடைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா போலீசார், அல்லு அர்ஜுன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் வலைதளத்தில்,
“திரையுலக பிரபலங்களின் வீடுகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் மாநில டி.ஜி.பி. மற்றும் நகர போலீஸ் கமிஷனர் கடுமையாக செயல்பட உத்தரவிடுகிறேன். இந்த விஷயத்தில் எந்த அலட்சியத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது. சந்தியா தியேட்டர் சம்பவத்தில் தொடர்பில்லாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்”
என்று பதிவிட்டுள்ளார்.