ஐதராபாத்: வெள்ளம், சேதம் இழப்பீடாக ரூ. 1350 கோடி உடனே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதலமைச்சர் கேசி சந்திரசேகர ராவ் வலியுறுத்தி உள்ளார்.
தெலுங்கனாவில் 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தலைநகரம் ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்து விழுந்தும் 32க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் மோடியும் கூறி உள்ளார். இந்நிலையில், மாநிலங்களில் ஏற்பட்ட பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறி உள்ளார்.
பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பிய டுவிட்டர் பதிவில் இதை குறிப்பிட்டு உள்ளார்.பலத்த சேதம் காரணமாக, முதல் கட்ட நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1,350 கோடி வழங்க வேண்டும் என்றும் அந்த பதிவில் சந்திரசேகர ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.