சென்னை:  சென்னையில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் கிண்டியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின்  அடிக்கல் நாட்டினார்.

சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டி, ‘தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை – 2026’ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கூடு கட்டும் வாழ்விடங்களில் மிக முக்கியமான ஒன்று தமிழ்நாட்டின் கடற்கரையோரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடற்கரையோரங்களில் பரந்த பகுதிகளில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பெரிய அளவிலான கூடுகளை கட்டுகின்றன.

உலகின் ஆறு கடல் ஆமை இனங்களில், ஐந்து இனங்கள் இருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு. இது அதன் உலகளாவிய சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. கடல் ஆமைகளின் முட்டை சேகரிப்பு 2019-20ம் ஆண்டில் 70,700 ஆக இருந்தது, 2024-25ம் ஆண்டில் 3.20 லட்சமாக வரலாற்று உச்சமாக அதிகரித்துள்ளது. குஞ்சுகள் பொரிப்பதும் இதேபோல் 2020-21ம் ஆண்டில் 1.16 லட்சத்தில் இருந்து 2024-25ம் ஆண்டில் 2.87 லட்சமாக உயர்ந்துள்ளது. இது நிலையான கள அளவிலான நடவடிக்கைகளின் செயல்திறனை எடுத்துக்காட்டுகிறது.

கடல் ஆமை பாதுகாப்பிற்கு வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் செயல்பாட்டு சிக்கலை நிவர்த்தி செய்ய, உலக வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்தின் கீழ், சென்னை, கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பீட்டில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த மையம் அறிவியல் ஆராய்ச்சி, டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவற்றிற்கான சிறப்பு உட்கட்டமைப்பை வழங்குவதோடு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு மையமாகவும், பொதுக்கல்வி மற்றும் சமூக தொடர்பு தளமாகவும் செயல்படுவதோடு, தொடர்புடைய துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்திற்கான ஒரு முக்கிய மையமாகவும் செயல்படும்.

இந்த மையத்தை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் நீண்டகால கடல்சார் பாதுகாப்பு முயற்சிகள் வலுப்படும். மேலும், தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் திட்டத்தின் நோக்கங்களுடன் இணைந்த அறிவியல் ரீதியாக இயக்கப்படும், சமூக ஆதரவு மற்றும் வலுவான கடல் ஆமை பாதுகாப்பில் மாநிலத்தை மேலும் உயர்த்தும்.

தமிழ்நாட்டை காலநிலை தாங்குதிறன் கொண்ட, வாழ்வதற்கு உகந்த மற்றும் நிலையான நகரங்களாக உருவாக்கும் நோக்குடன், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை-2026ஐ வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முதன்மை தலைமை வன பாதுகாவலரும் தலைமை இயக்குநருமான அன்வர்தீன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு கூறி உள்ளார்.

[youtube-feed feed=1]